Thursday, 27 September 2018

பாத்திமா கல்லூரி முத்தமிழ் விழா - வைரவிழாக் கொண்டாட்ட

பாத்திமா கல்லூரி (தன்னாட்சி) மதுரை – 18
முத்தமிழ் விழா
பார்போற்றும் பாத்திமா கல்லூரியில் செப்டம்பர் - 15,16 ஆகிய இருதினங்களில் வைரவிழாக் கொண்டாட்டமாக முத்தமிழ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செயலர் முனைவர் அருட்சகோதரி பிரான்சிஸ்கா ப்ளோரா, முதல்வர் முனைவர் அருட்சகோதரி செலின் சகாயமேரி, துணைமுதல்வர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதல்நாள் நிகழ்வாக உரையரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் “யாதுமாகி நின்றாய் தோழி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது சிறப்புரையுரையில் ‘பெண் என்பவள் வீரத்தமிழச்சி என்பதை உணர்ந்து,  சாதனை நிகழ்த்தி, வழிகாட்டியாக இருப்பவள் என்றும் ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, தோழியாக அகிலத்தின் அனைத்துமாய் திகழ்பவள் என்றும்’ தனது வீரம் செறிந்த உரையில் மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.
            அதனைத் தொடர்ந்து முனைவர் செந்தில் அவர்களின் ‘செந்தணல் கலைக்குழு’வினரின் பறையாட்டம், கரகாட்டம், விழிப்புணர்வுப்பாடல் இடம்பெற்றது.  பாத்திமா கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியமும், ஒயிலாட்டமும் இடம்பெற்றது. 

இரண்டாம் நாள் நிகழ்வாக திரைப்படப்புகழ் கலைஞர், ‘நிஜ நாடக இயக்க’ நிறுவனர் முனைவர் இராமசுவாமி அவர்களின் ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ எனும் நிஜநாடகம் அரங்கேற்றப்பட்டது. கருவிகள் மனிதர்களின் பயன்பாட்டிற்கானது, கருவிகளின் பிடிக்குள் மனிதன் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த நிகழ்வாக பட்டிமன்றப் புகழ் ‘த.ராஜாராம்’ அவர்களின் தலைமையில் ‘பாரதியின் கவிதைக்காடு மணக்க பெரிதும் காரணம் மரபு வேர்களே! புதுமை மலர்களே!’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மரபின் வேர்களே! எனும் தலைப்பில் பேராசிரியை திருமதி சி.எஸ்.விசாலாட்சி, திரு இரா.மாது, அவர்களும், புதுமை மலர்களே! எனும் தலைப்பில் கோ.ரேவதி சுப்புலெட்சுமி, திரு ரெ.இராஜ்குமார் அவர்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். பட்டிமன்றத்தின் நிறைவாக பாரதியின் கவிதைக் காட்டிற்கு மணம் சேர்க்க வல்லது புதுமை மலர்களே! என நடுவர் தீர்ப்பு வழங்கினார். இனிதே இந்நிகழ்வு முத்தாய்ப்பாய் முத்தமிழும் சிறப்புற நடந்தேறியது.

Thursday, 23 February 2017

பாத்திமா கல்லூரி சிறுகதை, கவிதை - பயிற்சிப் பட்டறை

படைப்பாக்கத் திறன்
பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம் 14. 02. 2017 அன்று சிறுகதை, கவிதை -  பயிற்சிப் பட்டறை   நிகழ்த்தியது. மதுரை, அகில இந்திய வானொலி நிலையம், நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு ஞான சம்பந்தன் என்கிற பூரணக்குமார் சிறப்புரையாற்றி மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.


Wednesday, 22 February 2017




பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மதுரை
வீரமாமுனிவா் & இதழியல்  கருத்தரங்கம்
            மேலைநாட்டிலிருந்து தமிழகம் வந்து சமயமும் தமிழும் வளா்த்த வீரமாமுனிவரின் விழாவானது  பாத்திமா கல்லூரியில்  22.02.2017 அன்று நடைபெற்றது. விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த வீரமாமுனிவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து விழா தொடங்கியது.
            சான்ஜோஸ் அரங்கில் விளக்கேற்றி இறை வணக்கத்துடன் தொடா்ந்த விழாவில் உதவிப் பேராசிரியா் முனைவா் இரா. டயானா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார். பாத்திமா கல்லூரி முதல்வர் முனைவர் அருள்சகோதரி பாத்திமாமேரி வாழ்த்துரை வழங்கினார். தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி கிறித்துவ ஆய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர்  முனைவா் அருள்தந்தை சி. மணி வளன் சே.ச அவர்கள்,  ”வீரமாமுனிவரின் உரைநடைத்திறன்” குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ் உரைநடையின் வளர்ச்சி, அதன் போக்கு, வீரமாமுனிவரின் பங்கு முதலியவற்றை அவர்தம் உரைநடை நூல்கள் வழி விரிவாக விளக்கினார்.  வீரமாமுனிவரின் தமிழ்ப்பணியைப் புரிந்து கொள்ள அவரது உரை வித்திட்டது.
            உதவிப் பேராசிரியர் முனைவர் ச.அருள்மைக்கேல்செல்வி, ”தேம்பாவணி காட்டும் மாண்பு”  என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.பொன்னி, ”சதுரகராதி பதிப்பும் நூற்சிறப்பும்” என்ற தலைப்பிலும் கட்டுரைகள் வழங்கினர். மாணவிகள் பங்கேற்ற தேம்பாவணி மனனப்போட்டி நடைபெற்றது. பாத்திமா கல்லூரி நாடகக் குழுவினர் தேம்பாவணியிலுள்ள இலக்கியக் காட்சியை மையமாகக் கொண்டு நாடகம் நிகழ்த்தினர். உதவிப் பேராசிரியா் திருமதி ஆ. மெர்சி ஏஞ்சலா தொகுத்து வழங்க, முதுகலை இரண்டாமாண்டு தமிழ் மாணவி அருள்சகோதரி சகாயமேரி நன்றி கூறினார்.
இதழியல் கருத்தரங்கம்
            பாத்திமாக் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக 22.02.2017 அன்று மதியம் இரண்டு மணியளவில் இதழியல் கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தின் உதவி இயக்குநர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்  ”ஊடகத் தமிழ்” என்ற தலைப்பில் உரையாற்றினார். உதவிப் பேராசிரியா் முனைவர் ஆ. தேவ்மாலா வரவேற்புரையாற்ற, உதவிப் பேராசிரியா் திருமதி ஆ. மெர்சி ஏஞ்சலா தொகுத்து வழங்கினார்.  கருத்தரங்கை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவியருக்கு கல்லூரி செயலர் முனைவர் அருள்சகோதரி பிரான்சிஸ்கா ப்ளோரா அவர்கள் பரிசு வழங்கினார். கல்லூரிகளுக்கு இடையே நடந்த கட்டுரைப் போட்டியில் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு பயிலும் செல்வி வ. கனக சுந்தரவள்ளி முதல் பரிசும் மதுரை மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இளங்கலை  இரண்டாமாண்டு பயிலும் செல்வி ஜெ. சுந்தரலெட்சுமி இரண்டாம் பரிசும் பெற்றனர். இளங்கலை மூன்றாமாண்டு தமிழ் மாணவி க. சோபிதா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.






Thursday, 31 March 2016

நினைவலைகள்

மதுரை பாத்திமா கல்லூரியில்  தமிழ் உயராய்வு மையம் சார்பில் இணைப் பேராசிரியர் முனைவர் வ. வள்ளியம்மாள் அவர்களுக்கு 30.03.2016 அன்று பணி நிறைவு விழா நடைபெற்றது.  பொன் விழா அரங்கில்  இனிதே நடந்த இவ்விழாவில்  கல்லூரி முதல்வர், செயலர், துறைத்தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேராசியர்கள் மற்றும் மாணவர்களின் அனுபவப் பகிர்வுகள்,  கலை நிகழ்வுகள் , ஒலி-ஒளிப் படக்காட்சி (முனைவர் வள்ளியம்மாளின் கடந்த கால நிகழ்வுகள் குறித்தவை) ஆகியன நடைபெற்றன.




Tuesday, 8 March 2016

தமிழ்த்துறைப் படைப்பாக்கத்திறன்

மதுரை பாத்திமா கல்லூரி, தமிழ்த்துறை,  8.03.2016 அன்று சான்றிதழ் வகுப்பின் சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினராக திரு. எஸ்.சி. சேகரன்( நாடக இயக்குநர்)அவர்கள் கலந்து கொண்டு  “ நாடகம் – சமகாலத் தேவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Thursday, 4 February 2016

வீரமாமுனிவா் கருத்தரங்கம்

வீரமாமுனிவா் கருத்தரங்கம்
            மேலைநாட்டிலிருந்து தமிழகம் வந்து சமயமும் தமிழும் வளா்த்த வீரமாமுனிவரின் விழாவானது  பாத்திமாக் கல்லூரியில்  4.2.2016 அன்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தின் வெளியே அமைந்துள்ள வீரமாமுனிவரின் சிலைக்கும்  இராபா்ட்-தே-நொபிலி சிலைக்கும் மாலை அணிவித்து விழா தொடங்கியது.
            பொன்விழா அரங்கில் விளக்கேற்றி இறை வணக்கத்துடன் தொடா்ந்த விழாவில் உதவிப் பேராசிரியா் முனைவா் இரா. ஏஞ்சல் வரவேற்புரை வழங்கினார். பாத்திமாக் கல்லூரி செயலர் அருட்சகோதரி பிரான்ஸிஸ் பாலின் வாழ்த்துரை வழங்கினார். அருளானந்தர் கல்லூரி , தமிழ்த்துறைத் தலைவர், அருட்தந்தை முனைவா் அன்பரசு,  ”ஐரோப்பிய சேசு சபையாளர்களின் தமிழ்ப்பணி” குறித்து சிறப்புரையாற்றினார். சேசு சபை சார்ந்த தந்தை கான்ஸ்தோன் லோரேன் கோர்து, தந்தை ஜோஸப் பெர்ட்ராண்ட், தந்தை லூயிஸ் செயிண்ட் சீர் போன்ற பல போதகர்களின் தமிழ்ப்பணிப் பற்றி விரிவாக விளக்கினார்.  வீரமாமுனிவரின் தமிழ்ப்பணியைப் புரிந்து கொள்ள அவரது உரை வித்திட்டது.
            உதவிப் பேராசிரியர் முனைவர் பாப்பா, ”திருக்காவலூர் கலம்பகம் உணா்த்தும் அறிவியல் சிந்தனைகள்”  என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியர் முனைவர் சி.சொர்ணமாலா, ”வீரமாமுனிவரின் இலக்கண விவரிப்புமுறை” என்ற தலைப்பிலும் கட்டுரைகள் வழங்கினர். மாணவிகள் பங்கேற்ற உருக்காட்சியும், தேம்பாவணி மனனப்போட்டியும் நடைபெற்றது. உதவிப் பேராசிரியா் முனைவர் செ.அன்பு ராணி தொகுத்து வழங்க, முதுலை முதலாமாண்டு தமிழ் மாணவி சகாயமேரி நன்றி கூறினார்.
இதழியல் கருத்தரங்கம்

            பாத்திமாக் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக 4.2.2016 அன்று மதியம் இரண்டு மணியளவில் இதழியல் கருத்தரங்கம் நடைபெற்றது. செம்மலர் இதழின் துணை ஆசிரியா் திரு. சோழ. நாகராஜன்  ”சமூக விழிப்புணர்வில் இதழியல் துறையின் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். இணைப் பேராசிரியா் முனைவர் க.லதா வரவேற்புரையாற்ற, உதவிப் பேராசிரியா் ச.அ.சுஜா தொகுத்து வழங்கினார். முதுலை இரண்டாமாண்டு தமிழ் மாணவி ஓவியா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.    

தமிழ் உயராய்வு மையம்,  பாத்திமாக் கல்லூரி

Monday, 1 February 2016

கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா

மதுரை, பாத்திமா கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா ஜனவரி 21ம் நாளன்று  நடைபெற்றது. விழாவின் சிற்ப்பு விருந்தினராக தமிழ் இணையப் பல்கலைக்கழத்தின் உதவி இயக்குநர், முனைவர் வ. தனலெட்சுமி அவர்கள்  கலந்து கொண்டு பேரவையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினார்.