Wednesday 10 February 2021

முத்தமிழ் விழா 2020 - 2021

 

அறிவிப்பும் அழைப்பும்

அன்புடையீர்  வணக்கம்.

மதுரை பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம் பெருமையுடன் வழங்கும் “முத்தமிழ் விழா” 11.01.2021, 13.02.2021 ஆகிய  இரு நாட்கள் நடைபெற உள்ளன.

நிகழ்வுகள்  Webinar Jam  வழியாக நடைபெறும்.

இணையவழியில் கலைநிகழ்ச்சிகளும், உரையரங்கமும், பயிலரங்கமும் நடைபெற உள்ளன.





பன்னாட்டுக் கருத்தரங்கம் - தற்காலத் தமிழ் இலக்கியங்களின் நோக்கும் போக்கும்

 

பன்னாட்டுக் கருத்தரங்கம்  - 2018

’தற்காலத் தமிழ் இலக்கியங்களின் நோக்கும் போக்கும்’ 

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக ’தற்காலத் தமிழ் இலக்கியங்களின் நோக்கும் போக்கும்’ எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் திசம்பர் 11, 12 ஆகிய இரு தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வினை  மதுரை பாத்திமா கல்லூரி, மலாயாப் பல்கலைக்கழகம் மற்றும் சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து நடத்தியது.

விழாவின் முதல் நாள் (11.12.18) நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் முனைவர் எம்.ஏ.சுசீலா, பேராசிரியர் முனைவர் சு.குமரன் (மலாயாப் பல்கலைக்கழகம், இந்திய ஆய்வியல்துறை), ந.முருகேசபாண்டியன் (முதன்மை ஆசிரியர், சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ்), மற்றும் திரு லக்‌ஷ்மணன் (வெளியீட்டாளர், சான்லாக்ஸ் ஆய்விதழ்) ஆகியோர் பங்கேற்றனர்.

இணைப் பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் க.லதா  வரவேற்புரை நல்கினார். துறைத்தலைவர் முனைவர் ஆ. பாப்பி கமலா பாய் அவர்கள் அறிமுக உரையாற்றினார். அவர்தம் அறிமுக உரையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் மையத்தினை எடுத்தியம்பினார். தொடர்ந்து கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய ஆய்விதழ் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது.

கல்லூரிச் செயலர் அருள்சகோதரி முனைவர் பிரான்சிஸ்கோ பிளோரா அவர்கள் ஆசியுரை வழங்கினார். அவர்தம் உரையில், “இக்கால இலக்கியம் மனிதன் வாழ்வைத் தேடித் திரிவதைச் சித்திரிக்கின்றது. கலாச்சாரம் அழிந்து வருவதை உணர்த்தி நிற்கிறது. இதன் நோக்கு  தமிழின் பெருமைகளை நடைமுறைக்குக்  கொண்டு வருகிறது. அதனை நன்முறையில் மாணவர்களுக்கு எடுத்தியம்புகிறது. இக்கருத்தரங்கில் 237 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இதன்வழி ஆய்வாளர்களுக்கு இக்கால இலக்கியத்தில் தனிப்பட்ட ஆர்வம் வளர்வதை வெளிப்படுவதை அறியமுடிகிறது” என்றார்.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்சகோதரி முனைவர் செலின் சகாயமேரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  ”தமிழ் இணையத் தமிழாய் மூத்த மொழியாய் வலம் வருகிறது. அத்தகு தொன்மையான தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டுவதாய் அமைகிறது இக்கருத்தரங்கம். மேலும், செம்மொழித்தன்மையையும் தமிழ் மொழியின் சிறப்பினையும் பறைசாற்றும்” என்று கூறினார்.

எழுத்தாளர் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள், ’தற்கால இலக்கியமும் மரபு இலக்கியமும் அந்நியமானதல்ல. மரபு இலக்கியத்தில் கால்வைத்துத்தான் தற்கால இலக்கியத்திற்குப் போகமுடியும். பார்வை, போக்கு, மொழி ஆகியன நவீனப்பட்டிருந்தாலும் அடிப்படை பழைய மரபுதான் என்பதை மறுக்க முடியாது’ என்று கருத்துரை வழங்கினார்.

முனைவர் சு.குமரன் சிறப்புரையில்,  “ஒரு ஆய்வாளனுக்குப் புதிய சிந்தனை வளர வேண்டும். ஆய்வில் ஏதாவது ஒன்று புதியதாக இருக்க வேண்டும். பரந்துபட்ட ஆய்வாகவும் அமைய வேண்டும். படைப்பாளனின் நோக்கம் அவனது படைப்பில் நிறைவடைதல் வேண்டும். வாசகன் திருப்தி அடைதல் வேண்டும்”  என்று தற்காலப் படைப்புகள் குறித்தான பதிவுகளை முன்வைத்து உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து முனைவர் க.முருகேசன் அவர்கள், ’தற்பொழுது இணையத்தின்வழி கொண்டாட்டம் மட்டுமே பகிரப்படுகிறது. இனிவரும் ஆய்வுகள் தமிழை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று சிறப்புரையாற்றினார்.

முதல் கருத்தரங்க அமர்வுக்கு திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர், முனைவர் க. நாகநந்தினி தலைமை தாங்கினார். இரண்டாம் அமர்வுக்கு தியாகராசர் கல்லூரி, இணைப் பேராசிரியர் முனைவர் சு. காந்திதுரை தலைமை வகித்தார். முனைவர் பா.லயோலா ஜூலியட் மேரி நன்றியுரை நல்க, உதவிப் பேராசிரியர் க.ரேவதி தொகுத்து வழங்கினார்.

நிறைவு விழா (12.12.18) சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்), முனைவர் க.முருகேசன் (தமிழ்த்துறைத் தலைவர், கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி) ஆகியோர் பங்கேற்றனர்.

உதவிப் பேராசிரியரும் கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஆ.தேவ் மாலா  வரவேற்புரை நல்கினார். கல்லூரிச்  செயலர் அருட்சகோதரி முனைவர் பிரான்சிஸ்கா பிளோரா அவர்கள் வாழ்த்துரை நல்கினார்.

கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் க.முருகேசன்  அவர்கள் கருத்தரங்கம் சிறப்புடன் நடத்திய பாத்திமா கல்லூரி தமிழ்த்துறைக்குப் பாராட்டுத் தெரிவித்து உரையாற்றினார். திரு சு.லட்சுமணன் அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.

சு. வெங்கடேசன் அவர்கள் தம் சிறப்புரையில், இலக்கியம் காலந்தோறும் மாறுபட்ட தன்மையுடையது. ஆனால் என்றும் நிலைத்தற்குரியது; மனித மன ஆற்றலை, நுட்பத்தைக் கண்டறியச் செய்வது; தற்காலத் தமிழாய்வுப் போக்குகள் தரமானதாக அமைய வேண்டும்” என்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.ரேணுகா நன்றியுரை வழங்கினார்.

 கருத்தரங்க அமர்வுகளுக்கு முனைவர் கோ.சுப்பு லெட்சுமி (உதவிப் பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி),முனைவர் மூ.கவிதா (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி), முனைவர் சோ.கி.கல்யாணி (தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீ மீனாட்சி மகளிர் கல்லூரி), முனைவர் ந.விஜய சுந்தரி ( உதவிப் பேராசிரியர், உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சி)  ஆகியோர் தலைமை தாங்கினர். இக்கருத்தரங்கிற்கு, பிறதுறைப் பேராசிரியர்கள்,  தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலங்கை, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் போன்ற பல பகுதிகளிலிருந்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்தனர்.