பாத்திமா
கல்லூரி (தன்னாட்சி) மதுரை – 18
முத்தமிழ்
விழா
பார்போற்றும் பாத்திமா கல்லூரியில் செப்டம்பர்
- 15,16 ஆகிய இருதினங்களில் வைரவிழாக் கொண்டாட்டமாக முத்தமிழ் விழா நடைபெற்றது. இவ்விழாவில்
செயலர் முனைவர் அருட்சகோதரி பிரான்சிஸ்கா ப்ளோரா, முதல்வர் முனைவர் அருட்சகோதரி செலின்
சகாயமேரி, துணைமுதல்வர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதல்நாள் நிகழ்வாக உரையரங்கம்
நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருமதி கவிதா ஜவஹர்
அவர்கள் “யாதுமாகி நின்றாய் தோழி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது
சிறப்புரையுரையில் ‘பெண் என்பவள் வீரத்தமிழச்சி என்பதை உணர்ந்து, சாதனை நிகழ்த்தி, வழிகாட்டியாக இருப்பவள் என்றும்
ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, தோழியாக அகிலத்தின் அனைத்துமாய் திகழ்பவள் என்றும்’
தனது வீரம் செறிந்த உரையில் மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முனைவர் செந்தில் அவர்களின்
‘செந்தணல் கலைக்குழு’வினரின் பறையாட்டம், கரகாட்டம், விழிப்புணர்வுப்பாடல் இடம்பெற்றது. பாத்திமா கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியமும், ஒயிலாட்டமும்
இடம்பெற்றது.
இரண்டாம்
நாள் நிகழ்வாக திரைப்படப்புகழ் கலைஞர், ‘நிஜ நாடக இயக்க’ நிறுவனர் முனைவர் இராமசுவாமி
அவர்களின் ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ எனும் நிஜநாடகம் அரங்கேற்றப்பட்டது. கருவிகள்
மனிதர்களின் பயன்பாட்டிற்கானது, கருவிகளின் பிடிக்குள் மனிதன் இருக்கக்கூடாது என்பதை
வலியுறுத்தும் விதமாக இந்நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த நிகழ்வாக பட்டிமன்றப்
புகழ் ‘த.ராஜாராம்’ அவர்களின் தலைமையில் ‘பாரதியின் கவிதைக்காடு மணக்க பெரிதும் காரணம்
மரபு வேர்களே! புதுமை மலர்களே!’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மரபின்
வேர்களே! எனும் தலைப்பில் பேராசிரியை திருமதி சி.எஸ்.விசாலாட்சி, திரு இரா.மாது, அவர்களும்,
புதுமை மலர்களே! எனும் தலைப்பில் கோ.ரேவதி சுப்புலெட்சுமி, திரு ரெ.இராஜ்குமார் அவர்களும்
தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். பட்டிமன்றத்தின் நிறைவாக பாரதியின் கவிதைக்
காட்டிற்கு மணம் சேர்க்க வல்லது புதுமை மலர்களே! என நடுவர் தீர்ப்பு வழங்கினார். இனிதே
இந்நிகழ்வு முத்தாய்ப்பாய் முத்தமிழும் சிறப்புற நடந்தேறியது.
No comments:
Post a Comment