Sunday, 30 September 2018

பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம், பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2018





பன்னாட்டுக் கருத்தரங்கம் அறிக்கை - 2018
மதுரை பாத்திமா கல்லூரியில்  தமிழ்த்துறை சார்பாக  ’கிறித்தவ இலக்கிய வெளியில் மனித மதிப்பீடுகள்’ எனும் பன்னாட்டுக் கருத்தரங்கம் செப்டம்பர் 28, 29 ஆகிய இரு தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முதல் நாள் (28.9.18) நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக  திரு ராஜன் சின்னதுரை (Heart International Ministries, USA), அருள் ஆனந்தர் கல்லூரியின் செயலர்  அருள்தந்தை முனைவர் சி. மணிவளன்  சே.ச மற்றும் திரு விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
உதவிப் பேராசிரியர் முனைவர் சி. அருள் மைக்கேல் செல்வி  வரவேற்புரை நல்க, துறைத்தலைவர் முனைவர் ஆ. பாப்பி கமலா பாய் அவர்கள் அறிமுக உரையாற்றினார். அவர்தம் அறிமுக உரையில், பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் மையத்தினை எடுத்தியம்பினார். தொடர்ந்து கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெயிடப்பட்டது. நூலினைக் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் செலின் சகாயமேரி வழங்க, சிறப்பு விருந்தினர் திரு ராஜன் செல்லப்பா பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் செலின் சகாயமேரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  “அன்பு, பணிவு, கருணை போன்ற மனித மாண்புகள் குறைந்து வரும் காலத்தில் இக்கருத்தரங்கம் இவண் நடத்தப்படுவது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. ஒருவனுடைய அறிவு அவனுடைய நற்செயல் மற்றும் நற்பண்புகளினால் மட்டுமே அமைய வேண்டும். நாமும் வாழ்ந்து பிறரை வாழவைப்பதுதான் வாழ்க்கை. வெற்றியை அடைவது மட்டும் முழுமையான வாழ்க்கையாக அமையாது; கற்றுக்கொள்ளும் விழுமியங்களில் தான் அமையும்” என மாணவர்களுக்கு நல்அறிவுரைகளைக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் திரு ராஜன் சின்னதுரை பேசுகையில், ’மனிதன் பங்குபெறுகிற கருத்தரங்கிலே மிக முக்கியமானது. கடவுளை நிராகரிக்கும்போது கட்டளைகளை அவமதிக்கும் போது மனிதன் உயிரோடு இருந்தாலும் மறைந்து போனவனாகவே வாழ்கிறான். மனிதனுடைய மதிப்பீடு அளவிட முடியாதது’ என்று கூறினார். அவரைத் தொடர்ந்து அருள்தந்தை முனைவர் சி.மணிவளன் சே.ச அவர்கள், ’தனிமனித மதிப்பீடுகளாக துறவு, தன்னடக்கம் என்ற இரண்டினையும் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் இலக்கியங்கள் மூலம் சான்றுகாட்டிப் பேசினார். சமுதாய மதிப்பீடுகளாக அன்பு, ஈகை, சாதி, வினைத்தூய்மை, நிலையாமை’ ஆகியவற்றையும் எடுத்துக் காட்டிக்  கூறினார்.
முதல்நாள் கருத்தரங்க அமர்வுகளுக்கு  டோக் பெருமாட்டி கல்லூரி மேனாள் துறைத்தலைவர், முனைவர் அஞ்சலி அன்னபாய், முனைவர் அருள் அரசு இஸ்ரேல், முனைவர் ஜே. பாத்திமா, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், உதவிப் பேராசிரியர் முனைவர் மோட்சம் ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முதல் நாள் நிகழ்வுக்கு முனைவர் சி.அருள் மைக்கேல் செல்வி வரவேற்புரை வழங்க, முனைவர் இரா. ஏஞ்சல் நன்றியுரை நல்கினார். இந்நிகழ்ச்சியை முனைவர் இரா.ஏஞ்சல் மற்றும் திருமதி ஆனி மரிய ஜான்சி இருவரும் தொகுத்து வழங்கினர்.
விழாவின் இரண்டாம் நாள் (29.09.2018) நிகழ்வில் கருத்தரங்கின் அமர்வுத்தலைவர்களாக  முனைவர் செவாலியே எம்.எஸ். காந்திமேரி, முனைவர் சி. அருள் மைக்கேல்  செல்வி ஆகியோர் இருந்தனர்.  
நிறைவு விழா 12.00 மணிஅளவில் நடைபெற்றது. கல்லூரிச் செயலர், அருள்சகோதரி முனைவர் ம.பிரான்சிஸ்கா பிளோரா வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் சிறப்புரையில், “இக்காலத்தில் மனித நேயம், மதிப்பீடுகள் மறைந்து கொண்டு வருகின்றன. பணி, மனத்தூய்மை, அன்பு, இரக்கம், கருணை ஆகியவற்றை விளக்குவதாய் கிறித்தவ இலக்கியங்கள் அமைகின்றன. பாதிரிமார்களும் தமிழ் இலக்கியங்களுக்குப் பல சேவைகள் செய்துள்ளனர். மேலும், இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்த தமிழ் உயராய்வு மையத்தை  உளமாறப் பாராட்டுகின்றேன்” என்றார்.
சிறப்பு விருந்தினராக மதுரை நொபிலி அருள்பணி மையத்தின் இயக்குநர் அருள்தந்தை முனைவர் மதுரை ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  அவர் உரையாற்றும் போது, “தமிழுலகுக்கு கிறித்தவ இலக்கியத்தின் பங்கு சிறப்பானது. மனித மதிப்பீடு ஓங்கியிருப்பது கிறித்தவ இலக்கியங்களில்தான். மேலும், ஈகை, பெண்கல்வி போன்ற சிறந்த மதிப்பீடுகளையும் பெற்றுள்ளது. மொழி அழிந்தால் இனம் அழிகிறது. இனம் அழிந்தால் பன்முகத்தன்மை அழிகிறது“ என்றும் மொழி வளரப் பாடுபட வேண்டும்  என்றும் கூறினார். இந்நிகழ்விற்கு முனைவர் இரா.டயானா கிறிஸ்டி  அவர்கள் வரவேற்புரை நல்க, உதவிப் பேராசிரியர் ப.திவ்யா நன்றியுரையாற்றினார். முனைவர் சி. அருள் மைக்கேல் செல்வி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இக்கருத்தரங்கிற்கு பிறதுறை பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் கட்டுரைகள் வழங்கினர்.  நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 165க்கும் மேற்பட்டவை. வாஷிங்டன், தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் எனப் பல நாடுகளிலிருந்தும், பாண்டிச்சேரி, சென்னை, தூத்துக்குடி, தேனி, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்தும் வந்த பேராளர்கள் கட்டுரைகளை வழங்கினர்.
மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, மீனாட்சி கல்லூரி, மீனாட்சி பயோனியர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி, மங்கையர்க்கரசி கல்லூரி எனப் பல கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்கள் நேரில் வந்து கலந்து கொண்டனர்.












Thursday, 27 September 2018

International Seminar on Human Values in Christian Literature




பாத்திமா கல்லூரி முத்தமிழ் விழா - வைரவிழாக் கொண்டாட்ட

பாத்திமா கல்லூரி (தன்னாட்சி) மதுரை – 18
முத்தமிழ் விழா
பார்போற்றும் பாத்திமா கல்லூரியில் செப்டம்பர் - 15,16 ஆகிய இருதினங்களில் வைரவிழாக் கொண்டாட்டமாக முத்தமிழ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செயலர் முனைவர் அருட்சகோதரி பிரான்சிஸ்கா ப்ளோரா, முதல்வர் முனைவர் அருட்சகோதரி செலின் சகாயமேரி, துணைமுதல்வர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதல்நாள் நிகழ்வாக உரையரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருமதி கவிதா ஜவஹர் அவர்கள் “யாதுமாகி நின்றாய் தோழி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது சிறப்புரையுரையில் ‘பெண் என்பவள் வீரத்தமிழச்சி என்பதை உணர்ந்து,  சாதனை நிகழ்த்தி, வழிகாட்டியாக இருப்பவள் என்றும் ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, தோழியாக அகிலத்தின் அனைத்துமாய் திகழ்பவள் என்றும்’ தனது வீரம் செறிந்த உரையில் மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.
            அதனைத் தொடர்ந்து முனைவர் செந்தில் அவர்களின் ‘செந்தணல் கலைக்குழு’வினரின் பறையாட்டம், கரகாட்டம், விழிப்புணர்வுப்பாடல் இடம்பெற்றது.  பாத்திமா கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியமும், ஒயிலாட்டமும் இடம்பெற்றது. 

இரண்டாம் நாள் நிகழ்வாக திரைப்படப்புகழ் கலைஞர், ‘நிஜ நாடக இயக்க’ நிறுவனர் முனைவர் இராமசுவாமி அவர்களின் ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ எனும் நிஜநாடகம் அரங்கேற்றப்பட்டது. கருவிகள் மனிதர்களின் பயன்பாட்டிற்கானது, கருவிகளின் பிடிக்குள் மனிதன் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த நிகழ்வாக பட்டிமன்றப் புகழ் ‘த.ராஜாராம்’ அவர்களின் தலைமையில் ‘பாரதியின் கவிதைக்காடு மணக்க பெரிதும் காரணம் மரபு வேர்களே! புதுமை மலர்களே!’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மரபின் வேர்களே! எனும் தலைப்பில் பேராசிரியை திருமதி சி.எஸ்.விசாலாட்சி, திரு இரா.மாது, அவர்களும், புதுமை மலர்களே! எனும் தலைப்பில் கோ.ரேவதி சுப்புலெட்சுமி, திரு ரெ.இராஜ்குமார் அவர்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். பட்டிமன்றத்தின் நிறைவாக பாரதியின் கவிதைக் காட்டிற்கு மணம் சேர்க்க வல்லது புதுமை மலர்களே! என நடுவர் தீர்ப்பு வழங்கினார். இனிதே இந்நிகழ்வு முத்தாய்ப்பாய் முத்தமிழும் சிறப்புற நடந்தேறியது.