Friday, 22 October 2021





தேசிய அளவிலான சீனியர் பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு, தமிழக பெண்கள் அணியில் ஒருவராக, நமது பாத்திமா கல்லூரியின் தமிழ்த்துறை மாணவி நிஷாந்தினி      ( இளங்கலை மூன்றாம் ஆண்டு ) தேர்வாகியிருப்பதில் மகிழ்ச்சி..

மாணவி நிஷாந்தினி குழு வெற்றியடைய வாழ்த்துக்கள்..




 

Thursday, 21 October 2021

கவிதை- முனைவா் சி.சொா்ணமாலா


       மனிதம் 

காணும் பொருளிலெல்லாம்

இறைவனைக் காணும் நாம்

ஏழையின் சிரிப்பிலும் 

காணலாமே!.

கல்லுக்குள்ளும் ஈரம் உண்டெனில்

மனிதா.......

உன் ‘உள்‘ளுக்குள்

வேண்டாமா ஈரம்?

பாத்திமா கல்லூரிக்கும் தமிழ் உயராய்வு மையத்திற்கும் பெருமை சோ்த்த மாணவியர்



பாத்திமா கல்லூரிக்கும் தமிழ் உயராய்வு மையத்திற்கும் பெருமை சோ்த்த மாணவியர்



 

இந்திய அளவிலான இரண்டாம் விக்கிமூல மெய்ப்புப் போட்டி ஆகஸ்ட் 2021-இல் வெற்றி பெற்று, பாத்திமா கல்லூரிக்கும், தமிழ்த்துறைக்கும் பெருமை சேர்த்த முதுகலை மாணவியர்.

மு.சரண்யா ( 2-ஆம் இடம் )

பா.மீனாபஞ்சவர்ணம் ( 13-ஆம் இடம் )

Fatima College, Research Center of Tamil - Internal Review

 

பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம் 
தேசிய தர மதிப்பீட்டு குழு - உள்ளக ஆய்வுக்குழு வருகையின் போது...




Thursday, 8 April 2021

 

ஆய்வுச் சுருக்கம்

ஆ.முத்துலட்சுமி

முனைவர்ப்பட்ட ஆய்வாளர்

பாத்திமா கல்லூரி

மதுரை -625 018

 

பழந்தமிழர்களின்  வாழ்வு  இயற்கையோடு  இயைந்ததாக  இருந்தது.  நிலம் சார்ந்த  குடிகளாக  அவர்கள்  இருந்தனர்.  பத்துப்பாட்டு,  எட்டுத்தொகை  ஆகிய நூல்கள்  பன்னூறு  புலவர்களால்  இயற்றப்பட்ட  வாழ்வியல்  சார்ந்த  நூல்களாகக் காட்சியளிக்கின்றன.  தமிழர்தம்  சிந்தனையில்  வைதீகம்  சார்ந்த  சிந்தனைகள் பெரிதும் காணப்படவில்லை என்பதை உணர முடிகின்றது. பெரும்பாலும் வழிபடு தெய்வங்கள்  பற்றிய  சிந்தனைகள்  மட்டுமே  காணப்படுகின்றன.  வழிபாட்டின் வழியிலான வாழ்க்கையையும், இறைவனை அடைவதற்குரிய வழிகளையும், தவவாழ்வையும், துறவு வாழ்வையும் விரும்பாத நிலையில்தான் இருந்தனர் என்பதையும் அறிய முடிகின்றது. சமயங்கள் தோன்றுவதற்கான கூறுகள் இருந்த சமூகமாகவே  சங்க       காலத்தை  மதிப்பிட  முடிகின்றது.  ஆதலின்  பண்டைத் தமிழரின்  வாழ்வானது         பெரிதும்  பொருள்  சார்ந்த  இவ்வுலக  வாழ்வாகும்.                 அதனையே  மேன்மையான  வாழ்வாகக்  கருதினர்,  என்றபோதிலும்  பழந்தமிழர்கள் உலகத்  தோற்றம்  பற்றியும்,  இயற்கை  நிகழ்வுகள்  குறித்தும்,  மறுமை  வாழ்வு, வீடுபேறு  போன்றவற்றைப்  பற்றியும்  கூட             சிந்தனைகளைக் கொண்டிருந்தனர் ஆனால்  பொருள்  சார்ந்த  வாழ்வினையே                  தமிழர்கள்  மேற்கொண்டிருந்தனர்.      எனவேதான்                  ஐம்பூதங்கள்  பற்றிய  சிந்தனைகளை  அவர்கள்  இவ்வுலக வாழ்விற்கான காரணிகளாகக் கொண்டிருந்தனர். இவ்வுலக வாழ்வென்பது இல்லற வாழ்வென்று    கூறுவதற்கு   ஒப்பான   வாழ்வாகும்.   இயற்கையோடு   இயைந்த வாழ்வைக் கொண்டிருந்த பழந்தமிழ் மக்களிடம் ஐம்பூதங்கள், உலகத் தோற்றம், பரிணாமவளர்ச்சி, வானியல் சார்ந்த அறிவு ஆகியவை காணப்பட்டமையைச் சங்க இலக்கியங்களிலிருந்து அறியமுடிகின்றது. தமிழர்களின்    பொருள்                சார்ந்த  வாழ்வை  வெளிப்படுத்தும் வகையில்தான் சங்க  இலக்கியப்           பாடல்கள்            அமைகின்றன.  அகம்,  புறம்  என்னும்  இருமைப் பண்புகள்  இகவாழ்விற்கு  முதன்மை  அளித்தலையே  குறிக்கின்றன.  இதுவே பொருள் சார்ந்த அல்லது உலகியல் வாழ்வாகும். மாறாக வழிபாட்டையும் இறைக்கருத்துக்களையும் கொண்டிருக்கும் பாடல்கள் வைதீகத் தாக்கத்தைப் பெற்றிருந்த  போதிலும்  உலகியல்  வாழ்வையே  பெரிதும்                  குறிப்பிடுகின்றன. குறிப்பாகப்                பத்துப்பாட்டு    நூல்களில் முதலாவதாகக்                 காணப்படும் திருமுருகாற்றுப்படை வைதீக நெறிக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அதிலும் உலகு சார்ந்த வாழ்வே முதன்மையாகக் குறிக்கப்படுகின்றது. பிற நூல்கள் முழுமையும்  பொருளாதய  வாழ்விற்கே  முதன்மையளிக்கின்றன.  வைதீகத்தின் தாக்கம் பழந்தமிழர்களைத் துறவுக்கோ தவ வாழ்விற்கோ ஆற்றுப்படுத்தவில்லை. மாறாக உழைப்பிற்கு முதன்மையளித்திருந்தனர். உலகு பசி தீர்க்கும் செயலாக உழவுத்தொழிலைக் கருதினரேயன்றி இறையருளால் மனிதர் வாழவியலும் என்னும் உலகிறந்த கருத்துக்களுக்கு அவர்கள் வாழ்வில் இடமளிக்கவில்லை. தமிழர்கள் பொருள்  சார்ந்த  உலகிலேயே  தம்  வாழ்க்கையின்  பயனை  அடைய  வேண்டும் எனக் கருதினர். அவர்கள் ஐம்பூதங்களின் ஆற்றலைக் கொண்டே இவ்வுலகு இயங்குகின்றது என்னும் இயக்கவியலை அறிந்திருந்தனர். எனவேதான் அவர்தம் வாழ்வு பொருளாயத வாழ்வாகப் பரிணமித்திருந்தது. உலகியல் செயல்களை முதன்மையாகக் கொண்ட வாழ்முறையைச் சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாகப் பத்துப்பாட்டு நூல்கள் வாழ்வியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஐம்பூதங்களின் இயக்கமே காரணமென்பதை இவ்வாய்வு வெளிப்படுத்துகின்றது.

ஆய்வுத் தலைப்பு

பத்துப்பாட்டில் ஐம்பூதங்கள்என்பது இவ்வாய்வின் தலைப்பாக அமைகின்றது.

ஆய்வு நோக்கம்

பழந்தமிழர்கள் தம் வாழ்வியல் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைகளைக் கொண்டிருந்தனர். பொதுவாக அவையாவும் உலகியல் சார்ந்த அனுபவங்களால் ஆனவை. பொருளின் இயக்கத்தால்தான் அவை மாறுபாடடைகின்றன என்னும் உண்மையை அறிந்திருந்தனர். எனவேதான் உலகியல் சார்ந்த வாழ்வில் அவர்கள் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். இயற்கையோடு தம் வாழ்வைப் பிணைத்துக் கொண்டவர்களாகவே தமிழர்கள் காணப்பட்டனர். ஆதலால் இயற்கையின் இயக்கம் பற்றிய சிந்தனையை இயல்பாகக் கொண்டிருந்தனர். இயற்கையின் அறியப்படாத புதிர்களையே அவர்கள் இறை வழிபாட்டின் வழி வெளிப்படுத்தினர். இறைவனைச் சார்ந்து தம் வாழ்வை அமைத்துக் கொள்ளாதவர்களாக   இருந்தமையால்தான் அவர்தம் வாழ்வில் உலகியல் சார்ந்த  செயல்பாடுகள்        பெரிதும் காணப்படுகின்றன. ஐம்பூதங்கள் குறித்த அவர்தம் அறிதல்களே அவர்தம் உலகியல் வாழ்விற்கு அடிப்படையாக அமைகின்றன என்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஆய்வுக் கருதுகோள்

சங்க காலத்தில் வாழ்ந்த மக்களிடம காணப்படும் வாழ்வியல் நெறிகளை அகம், புறம் என்று பகுப்பது போல உலகியல், துறவறவியல் என்றும் பகுக்கலாம். வைதீகம் சார்ந்த நெறிகளைக் கடைபிடித்துத் தம் வாழ்வின் ஒழுங்குகளை அமைத்துக் கொள்வது துறவறவாழ்வாகும். இல்லறம், காதல், போர், குடும்ப உறவுகள் போன்றவற்றைப் பேணி வாழ்வது உலகியல் வாழ்வாகும். இத்தகைய வாழ்வை மேற்கொள்ளும் தமிழரிடம் இயற்கை சார்ந்த அறிதல்கள் காணப்பட்டன. அவற்றின் வழியாக ஐம்பூதச் சேர்க்கையினால் ஆனதே இவ்வுலகு என்பதையும், ஒவ்வொரு பூதத்திற்கும் ஒவ்வொரு பண்பும் பயனும் இருக்கின்றது என்பதையும் அறிந்திருந்தனர். ஐம்பூதங்களின் இயக்கததை அறிந்த அவர்தம் வாழ்வு இயல்பில் உலகியல் சார்ந்த வாழ்வாக   அமைந்திருந்தது   என்பதே   இவ்வாய்வின் கருதுகோளாகும்.

ஆய்வு எல்லை

இவ்வாய்விற்குப் பத்துப்பாட்டு நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை எல்லையாக அமைகின்றன.

ஆய்வுச் சான்றாதாரங்கள்

ஆய்வுக்குப்  பயன்படுத்தப்படும்  சான்றாதாரங்கள்  இரண்டு  வகைப்படும். அவை முதன்மைச் சான்றாதாரங்கள், துணைமைச் சான்றாதாரங்கள் என்பனவாகும்.

முதன்மைச் சான்றாதாரங்கள்

இவ்வாய்விற்குப்              பத்துப்பாட்டு   நூல்கள்   முழுவதும்   முதன்மைச் சான்றாதாரங்களாக அமைகின்றன.

துணைமைச் சான்றாதாரங்கள்

இவ்வாய்விற்குத்  துணை  செய்யும்  சங்க  இலக்கியத்தில்  எட்டுத்தொகை நூல்கள், ஐம்பூதங்களைப் பற்றிய அறிமுகத்தைத் தரும் நூல்கள், திறனாய்வு நூல்கள், கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், ஆய்வேடுகள் ஆகியன துணைமைச் சான்றதாரங்களாக அமைகின்றன.

ஆய்வு முன்னோடிகள்

ஐம்பூதங்கள்      பற்றிய ஆய்வுகளில செந்தமிழ்க் கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட கோ.சுப்புலட்சுமியின்பாரதியார் படைப்புகளில் பஞ்சபூதங்கள்என்ற ஆய்வேடும், மா.இராசமாணிக்கனாரின் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலும் முனைவர் பி.சேதுராமனின்ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்என்ற நூலும் ஆய்வு முன்னோடிகளாக அமைகின்றன.

ஆய்வு அணுகுமுறை

பத்துப்பாட்டு நூல்களின் பாடல்களைத் தொகுத்தும் பகுத்தும் விளக்கியும் ஆய்வு செய்வதால் பகுப்பாய்வு முறையும், விளக்கமுறை ஆய்வும் பொருள் சார்ந்த வாழ்வை பொருள்முதல்வாத நோக்கில் அணுகுவதால் பொருள்முதல்வாத ஆய்வு அணுகுமுறையும் இவ்வாய்வில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆய்வுப் பகுப்பு

இவ்வாய்வேடானது முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களாகப் பகுக்கப்படுகின்றது.

1.        பத்துப்பாட்டும் பழந்தமிழரின் பொருளாயத வாழ்வும்

2.        பழந்தமிழரின் வாழ்வில் நிலம்

3.        பழந்தமிழரின் வாழ்வில் நெருப்பு

4.        பழந்தமிழரின் வாழ்வில் நீர்

5.        பழந்தமிழரின் வாழ்வில் காற்று

6.        பழந்தமிழரின் வாழ்வில் விசும்பு

என்பனவாகும்.

முன்னுரையில் ஆய்வுத் தலைப்பு, ஆய்வு நோக்கம், ஆய்வுக் கருதுகோள், , ஆய்வு எல்லை, ஆய்வுச் சான்றாதாரங்கள், ஆய்வு முன்னோடிகள,; ஆய்வு அணுகுமுறை, ஆய்வுப் பகுப்பு ஆகியவை அமைந்துள்ளன.

                  பத்துப்பாட்டும் பழந்தமிழரின் பொருளாயத வாழ்வும்என்னும் முதல் இயலில் பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய அறிமுகத்தையும் தமிழரின் பொருளாயத வாழ்வு பற்றிய சிந்தனைகளில் ஐம்பூதங்கள் ஆற்றும் பங்கினையும் வெளிப்படுத்துகின்றது. தமிழர் சிந்தனை மரபில் கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலகியல் சார்ந்த வாழ்வே தமிழர்க்கான அடையாளமாகக் காணப்படுகின்றது. கருத்து முதல்வாதம்  சார்ந்த சிந்தனைகளைத் தமிழர்கள் முதன்மையாகக் கொள்ளவில்லை என்பதையே பத்துப்பாட்டு நூல்கள் உணர்த்துகின்றன. பூதங்கள் ஐந்து என்றும் அவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்றும் இவை தம்முள் ஒன்றிணைந்தே உலகமும் உலகப்பொருட்களும் உருவாகின்றன என்றும் தமிழர் சிந்தனை மரபு கூறுகின்றது. இதனை, நிலமும் நீரும் இணைந்தே உணவாகின்றது என்பதிலிருந்தும் விசும்பிலிருந்து  உயிர்த்தலே  உலகம்  என்றும்  நிலம்,  தீ,  நீர்,  வளி,  விசும்பு, என்னும் ஐந்தினால் ஆன மயக்கமே உலகம் என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுவதிலிருந்தும் அறியலாம்;. மயக்கம் என்ற சொல் தம்முள் முரண்படுதலை அல்லது இயக்கத்தைக் குறித்து நிற்கின்றது. பௌத்த, சமண சமயங்கள் உலகாயதத்தை வலியுறுத்தும் சமயங்கள். அவை தமிழர் வாழ்வின் பொருளாயத சிந்தனைகளை அடியொற்றியவையாக அமைகின்றன. வைதீக நெறிகளின் தாக்கம் காணப்பட்டாலும் பத்துப்பாட்டு நூல்களிலும் எட்டுத்தொகை நூல்களிலும் பெரிதும் பொருளாயத வாழ்வே மேம்பட்டு நிற்கின்றது. தீயினால் இவ்வுலகு தோன்றியது, நீரினால் இவ்வுலகம் தோன்றியது என்பன போன்ற கிரேக்கக் கருத்தியல்களைப் போல ஐம்பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகத் தோற்றத்திற்குக் காரணம் என்னும் சிந்தனை சங்கப் பாடல்களில் காணப்படுகின்றது. அவையே பொருளாயத வாழ்விற்கு அடிப்படையாகவும் அமைகின்றன.

 பழந்தமிழரின் வாழ்வில் நிலம்  என்னும் இரண்டாவது இயல் பழந்தமிழர் வாழ்ந்த  சூழல்  ஐந்நிலப்பாகுபாட்டைக்  கொண்டதெனக்  கூறப்பட்டாலும்  அதில் பாலை என்னும் நிலம் இல்லை என்று குறிக்கப்படுவதால் நானிலமாகக் கொள்ளப்படும் நிலையில் இந்நானிலத்தில் தமிழர்கள் வாழ்வு நிலம் சார்ந்து அமைந்திருந்த பாங்கை வெளிப்படுத்துகின்றது. நிலம் என்ற சொல் மக்கள் வாழும் பகுதியையும் அவர்தம் வாழ்வாதாரச் செயல்களுக்கான பகுதியையும் குறித்து நிற்கின்றது. ஐந்து வகை நிலத்திலும் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வில் நிலத்தின் பண்பையும் மேன்மையும் உணர்ந்திருந்தனர். நிலத்தில் விளையும் பொருட்கள், கிடைக்கும் உணவுகள் பறறியச் சிந்தனைகள் பலவாறாகக் காணப்படுகின்றன. குறிஞ்சி நிலத்தின தன்மை பத்துப்பாட்டில் பெரிதும் தினைப்புனம் சார்ந்ததாகவும், அகில், சந்தனம் போன்ற மணம் வீசும் மரங்களைக் கொண்டதாகவும், மஞ்சள், இஞ்சி, மிளகு போன்றவை வளர்ந்து வளமை தரும் நிலமாகவும் காட்சி தருகின்றது. அந்நிலத்து வாழும் மக்கள் பெரிதும் வேட்டையாடுதலிலும், தினை விதைத்து அறுவடை செய்வதிலும் ஈடுபட்டிருந்தனர். கிழங்கு அகழ்தல், தேனெடுத்தல் போன்ற தொழில்களையும் மேற்கொண்டிருந்தனர். இவர்தம் இல்லற வாழ்வில் விருந்து, கொடை ஆகியவை முக்கியப் பங்காற்றின என்பதையும் காணமுடிகின்றது. கடையெழு வள்ளல்கள் கொடையளித்தலுக்குச் சிறந்த நிலமாக குறிஞ்சி நிலம் விளஙகுகின்றது. விருந்து தருவது குறிப்பாக இல்லறத்தானுக்கு உரிய செயலாகும். தனியொரு மனிதனாக இருக்கும் போது விருந்து என்ற பண்பு வருவதில்லை. எனவே விருந்தயர்தல் என்பது தமிழரின் பண்பாக மாறுவதற்கு நிலம் சார்ந்த உணவுகளும் உடைமைப் பண்புகளும் அதன் விளைவான குடும்ப உருவாக்கமும் காரணமாகும். குறிஞ்சி நிலத்தவர்கள், தேன், கிழங்கு போன்றவற்றையும் வெண்ணெல் அரிசி, மூங்கிலரிசி ஆகியவற்றால் ஆன சோற்றையும் பல விலங்குகளின் இறைச்சியையும் உணவாகத் தருவர் என்று குறிப்பிடப்படுகின்றது. அது போல முல்லை நிலத்தின் பண்புகளும் காணப்படுகின்றன. வேங்கை மரங்களும், காஞ்சி மரங்களும், முல்லைப் பூக்களும் அடையாளமாகக் காணப்படும். முல்லை நிலத்தவர்கள் ஆயர்கள் எனப்படுவர். இவர்களது முதன்மையான பணி கால்நடைகளை மேய்த்தல் ஆகும். மாடுகள், ஆடுகள், எருமைகள் என இவர்கள் வளர்த்த கால்நடைகளைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று மேய்த்தனர் என்பதையும், காலையில் சென்று மாலையில் வீடு திரும்புபவர்களாக இருந்தனர் என்பதையும் அறிய முடிகின்றது.

மருதநிலம் ஆற்றின் வளத்தை அடிப்படையாகக் கொண்டது. வற்றாத ஆறுகளும், வயல்வெளிகளும் மருத நிலத்தின காட்சிகளாக அமைகின்றன. அங்கு வாழ்ந்த மக்கள் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற காலங்களில் மிகவும் மகிழ்ச்சியாக   இருந்தமையைக்                  காணமுடிகின்றது. மருதநில   வேளாண்மைப்  பொருட்களுக்கு இணையாகப் பிற நிலங்களின் பொருட்கள்     மாற்றிக்                கொள்ளப்பட்டன. பல்வேறு வகை நெல் வகைகள் பயிரிடப்பட்டன. மருத நிலத்து வாழ்ந்த மக்கள்  தொல்பசிஅறியா துளங்கை   என்னும்   சிற்றூரினைப் பெற்றிருந்தார்கள். பசி என்பதை அறியாதவர்களாக இருந்தனர். இவர்களை நாடிச் செல்வோருக்கு அரிசிச் சோறும், ஊனும் தந்து மகிழ்ந்தனர். பெரும்பாலும் அரசுகள் மருத நிலம் சார்ந்தே உருவாயின. நெய்தல் நிலத்தில்   கடற்கரை   பெரிதும்   காட்சிப்படுத்தப்படுகின்றது. பரதவர்களும் உமணர்களும் தங்கள் வாழ்வியலுக்கான செயல்பாடுகளை நிகழ்த்தும்           இடம்  கடலாகும்.                  வணிகத்தில் ஈடுபட்டவர்களும்                உண்டு.  பாலை                 நிலத்தின் இயல்பு கோடையும் வெம்மையும் மாறும், கடுமையான கோடையினால் மலைகளில் தீப்பிடித்து புகை வருவதை ஆற்றுப்படை நூல்கள் கூறுகின்றன. விறலியின் கால்கள் பாலை நிலத்தில நடக்கும் போது பாதிக்கப்படுவதை பாடல்களில் காணமுடிகின்றது. எயினர்கள் புல்லரிசி எடுத்தலிலும் கள்வர்கள் கொள்ளையிலும் வழிப்பறியிலும்  ஈடுபடுவதையும்  காணமுடிகின்றது. எயினர்கள் தாம் சேர்த்த புல்லரிசி கொண்டு உணவு சமைத்து விருந்தினர்க்குத் தருவர். ஐந்து நிலத்தில் வாழ்ந்த மக்களும் பொருளாயத வாழ்விற்கு அடிப்படையாக நிலத்தைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகின்றது.

 பழந்தமிழரின் வாழ்வில் நெருப்புஎன்னும் மூன்றாவது இயல் தமிழர்கள் நெருப்பினைக் கையாண்ட வழிமுறைகளைப் பற்றிக் கூறுகின்றது. நெருப்பிலிருந்தே உலகமும் உலகப் பொருட்களும் உருவாயின என்பதை கிரேக்கத் தத்துவச் சிந்தனையில் காணமுடிகின்றது. நெருப்பின் பயன் வாழ்வில் பல்வேறு  சூழல்களில் காணப்படுகின்றது.         மனித நாகரிகத்திற்கும் வளர்ச்சிக்கும் நெருப்பே முதற்காரணமெனலாம். நெருப்பானது பழந்தமிழர்களால் பயன்படுத்தப்படும் முறை பற்பலவாகக் காணப்படுகின்றன. பத்துப்பாட்டு நூல்களில் கோவலர்கள் தீக்கடைக் கோலால் தீயுண்டாக்குகின்றனர். தம் உடல் குளிரில் நடுங்கும் போது தீ வைத்து தம்மை காத்துக் கொண்டனர். உணவு சமைத்தலுக்கும் தீ முதன்மையாக விளங்குகின்றது. பச்சையாக உண்டு வாழ்ந்த மனிதனுக்கு உணவைப் பக்குவப்படுத்தும் சிந்தனை தீயில் வெந்ததைத் தின்று சுவைத்த பின்பு ஏற்பட்டிருக்கக் கூடும். அதனால்தான் இறைச்சியைச் சுட்டும், அவித்தும் தின்பதைக்காணமுடிகின்றது.                  பல்வேறு   அடிசில்களை   வேக   வைத்துத்   தின்னும் வகையினராகப் பண்டைத் தமிழர்கள் காணப்பட்டனர். நெருப்பினைக் கொண்டு பெண்கள் குளித்த பின்பு தம் கூந்தலுக்குப் புகையிட்டனர் என்பதை அறிய முடிகின்றது. விளக்கேற்றவும், இரவில் கடலில் சென்றவர்கள் கரையைக் காண உதவும் விளக்காகவும்  தீ  பயன்படுகின்றது.  வெப்பத்திற்கு  முதன்மையாக விளங்கும் சூரியன் பற்றிய பல்வேறு சிந்தனைகள் பத்துப்பாட்டில் கூறப்படுகின்றன. காலையில் சூரியன் எழுவதும் மாலையில் மறைவதும் காட்சிப்படுத்தப்படுகின்றது. தீயினைக்                  கொண்டு  உணவு  சமைத்தலைக்  காணமுடிகின்றது.  இவ்வாறான பல்வேறு பயன்பாடுகளுக்கு நெருப்பினைப் பயன்படுத்தியதைப் பத்துப்பாட்டு வழி அறிய முடிகின்றது. தமிழர்கள் தம் உலகியல் சார்ந்த வாழ்வை நெருப்பினைக் கொண்டு மேற்கொண்டிருந்தனர் என்பதைப் பத்துப்பாட்டு  வழி அறிய முடிகின்றது.

 பழந்தமிழரின் வாழ்வில் நீர்என்னும் நான்காம் இயலானது நீர் என்னும் பூதத்தை உலகிற்கு   அடிப்படையாகக்   குறிக்கும்   போக்கு   எங்கும் காணப்படுகின்றது. உலகத் தோற்றத்திற்கு நீரே காரணமென்னும் தத்துவவாதிகள் இருந்தனர். நீரே மனித உயிர்களுக்கு முதன்மையாக விளங்கும் பொருளாகக் காணப்படுகின்றது.  பண்டைத்                  தமிழரின்            வாழ்வில்              நீர் பெரிதும் இன்றியமையாதவொன்றாகத் திகழ்கின்றது. பத்துப்பாட்டில் காணப்படும் பாடல்களில் ஆற்றுப்படை என்பது நீரின் வழியைக் குறித்து நிற்கின்றது. நீர் மழையாகப் பொழிகின்றது. வீழ்கின்றது.   கடலிலிருந்து   மேகமாகின்றது   இவ்வாறான தொடர்ச்சியில் உலகில் நீர் மீண்டும் மீண்டும் உற்பத்தியாகின்றது. தமிழர்களின் சிந்தனையில் மேகம், மழை ஆகியவை பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. மழையினால்தான் மக்கள் தங்கள் தொழிலைத் திறம்படச் செய்து கொள்ள முடிந்தது.  மேகங்கள்  மலைகளில்  உறைவதையும்  சித்திரிக்கின்றனர்.  மழை மன்னனின் செழிப்பைக் கூறும் ஒன்றாகவும காணப்பட்டது. மழையில்லாத நாட்டின் மன்னன் தீமையானவன் என்று குறிப்பிடப்பட்டான். கோவலர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் வகையினர் ஆதலின் அவர்கள் மழையினை வெறுத்தனர்.  மழைபெய்யும்  காலங்களில்  வேறிடங்களுக்குக்  கால்நடைகளைக் கொண்டு செல்பவராயிருந்தனர். மழைநீரானது பல்வேறு விதங்களில் தரையில் ஓடுகின்றது. அதில் மழை பெய்து மலையினின்று வீழும் அருவியும் ஒன்றாகும். மழைக்காலத்தில் பொழியும் நீரானது மலைகளில் இருந்து வீழும் போது அருவியாகின்றது. பழந்தமிழ்ப் புலவர், அக்காலத்துக் கூரைகளிலிருந்து ஒழுகுவதைக் கூட அருவியைப் போல இருந்ததாகக் குறித்துள்ளனர். ஆறுகள்தான் அன்றைய மக்களின் பொருளாயத வாழ்விற்கு இன்றியமையாததாக இருந்தது. வான்பொய்த்தாலும் தான் பொய்யாத காவிரியைக் கொண்ட மக்கள் செழுமையாக இருந்தனர். ஆற்றில் மக்கள் நீராhடினர். இவ்வாறு பல்வேறு தொழில்களுக்கும், பயனுடையதாக இருந்தது நீராகும்.

 பழந்தமிழரின்  வாழ்வில்  காற்று   என்னும்  இயலானது  காற்று  பற்றிய பல்வேறு சிந்தனைகள் தமிழரின் பண்பாட்டில் செலுத்திய ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. காற்றின் துகள்களால்தான் இவ்வுலகில் பொருள்கள்  உற்பத்தியாகின்றன  என்னும்  சிந்தனை  காணப்படுகின்றது.  பூதச் சேர்க்கையில் காற்று மிக முக்கியமானது எனினும் வாழ்வில் அதன் பயன்பாடு மிகவும் குறைவாகவே காணப்படும். மருத நிலத்தில் நெல் தூற்றும் போது காற்றினை  எதிர்நோக்கியிருந்தனர்  என்பதைக்  காணமுடிகின்றது.  வேளாண்மைச் செயல்பாடுகளில் காற்றினால் பயிர் விளைந்ததாகக் கூறப்படுவதுண்டு. அது போல நெய்தல் நிலத்தில் வாழ்வோர் காற்றினால் கலம் செலுத்தி மீன்பிடித்தனர் என்பதையும் வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதையும் காணமுடிகின்றது. வீடுகள் காற்றை உள்வாங்கும் வகையில் அக்காலத்தில் கட்டப்பட்டன. தென்றல் காற்று உள்வருவதற்கான சாளரங்களைக் கொண்டு வீடுகள் அமைக்கப்பட்டன. காற்றினை வேகமான செயல்பாட்டிற்கு ஒப்பிட்டுக் கூறும் பண்பாடு காணப்பட்டது. கடுகிப் பறத்தல் என்பதும் குதிரைகளும் மன்னர்களின் போர்ச் செயல்களும் காற்றின் வேகத்திற்கு ஒப்புமையாகக் கூறப்பட்டது. காற்று மழையுடன் வரும் போது ஈரக்காற்றாக மாறி விடுகின்றது. மழை பொழிவதற்கும் நெருப்பின் விசைக்கும் காரணமாக காற்று அமைகின்றது. இவ்வாறு காற்றின் பல்வேறு நன்மைகள் மக்களின் வாழ்வில் அவர்தம் தன்னிச்சையான செயல் தவிர்த்த பிற செயல்பாடுகளில் பயன்பாடுடையதாகக் காணப்படுகின்றது.

 பழந்தமிழர் வாழ்வில் விசும்பு” என்னும் ஆறாவது இயல் விசும்பு பற்றிய சிந்தனைகளைப்            பத்துப்பாட்டிலிருந்து  வெளிப்படுத்துவதாக   அமைகின்றது. ஐம்பூதங்களில் கண்ணுக்குப் புலனாகாத ஒன்றாகக் காணப்படும் இம்மூலகமானது உலகின் தோற்றத்திற்குக் காரணமாகப் பெருவெடிப்பினால் வளர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. விசும்பு, வான், ஆகாயம் போன்ற சொற்களால் குறிக்கப்படுகின்றது. வானம் என்பது வெற்றிடம் என்று பொருள்படும். வானம் பற்றிய பல்வேறு சிந்தனைகள் தமிழரிடம்காணப்பட்டன. விசும்பிலிருந்து பிற  பூதங்களும்  பிறக்கின்றன  என்று கூறப்படுகின்றது.  வானில்  தோன்றும் ஞாயிற்றினைப் பற்றிய பல்வேறு செய்திகளைப் பத்துப்பாட்டு குறிப்பிடுகின்றது. விண்ணிடத்தே தோன்றும் ஞாயிறு, ஞாயிற்றின் ஒளியை மறைக்கும் வகையில் பகைவரின் படையெடுப்பினால் புழுதி பறந்தது என்பதை ஒப்புமைப்படுத்தும் பாங்கு காணப்படுகின்றது. இருண்ட வானிற்கு ஒளி தருவதாக நிலவு சுட்டப்படுகின்றது. வானில் தோன்றும் விண்மீன்கள், ராசிகள் பற்றிய சிந்தனை தமிழர்க்கு இருந்தமையைக்             காணமுடிகின்றது. நட்சத்திரங்களின் இடப்பெயர்ச்சி, அதன் சுழற்சியால்  விளையும் கால மாற்றம்                  ஆகியவை பற்றிய அறிவைக்  கொண்டிருந்தனர். நீல்நிற   ஆகாயம்  என்று குறிப்பிடப்படுகின்றது. உண்மையில் வானம் நிறமற்றது. அதற்கு நீல நிறம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பால்தான் ஏற்படுகின்றது என்பதை அறிந்திருந்தனர். மேகங்களிலிருந்து வெளிப்படும் இடியோசையை வானிலிருந்து கேட்பதாகக் கருதினர். மழை வானிலிருந்து பொழிவதாகக் கூறுவது இயல்பான நடைமுறையாகும். வானை அளாவி நிற்கும் மலைகளையும் அங்கிருந்து வரும் கூச்சலையும் கூறும் அதே வேளையில் கட்டிடங்களும் வானை அளாவி நிற்கின்றன என்று கூறும் பாங்கைக் காணமுடிகின்றது. இவ்வாறு தமிழர்தம் வாழ்வில் அவர்களுக்கு நேரடியான பயனைத் தருவதாக அல்லாமல் அதன் இயல்புகளைப் பற்றிய சிந்தனைகளில் விசும்பு என்பது வெளிப்படுகின்றது.

ஆய்வு முடிவுரையில் ஒவ்வோர் இயலிலும் இடம்பெற்றுள்ள முடிவுகள் தொகுத்துத் தரப்படுகின்றன.

துணைநூற் பட்டியல்

ஆய்வேட்டின் இறுதியில் ஆய்வுக்குத் துணை செய்த நூல்களில் பட்டியல் அகர நிரல்படுத்தித் தரப்படுகின்றன.

பின்னிணைப்பு

ஆய்வேட்டின் இறுதியில் பின்னிணைப்பு இணைக்கப்படுகிறது.