முத்தமிழ் விழா
அறிக்கை
மதுரை, பாத்திமாகல்லூரி, தமிழ் உயராய்வு மையம் சார்பாக முத்தமிழ் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இவ்வாண்டு, கொரோனா பெருந்தொற்று காலத்தைக்
கருத்திற்கொண்டு இணையவழியாக முத்தமிழ்விழாவை 11.02.2021 மற்றும் 13.02.2021
ஆகிய இருநாட்கள் நடத்தியது.
முதல்நாள் நிகழ்வில் பயிலரங்கமும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வின் தொடக்கமாக இறைவாழ்த்தும், தொடர்ந்து மொழிவாழ்த்தும் பாடப்பட்டன. இந்நிகழ்விற்குத்
திருமதி க. ரேவதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின்
செயலர் அருள்சகோதரி பிரான்ஸிஸ்கா
புளோரா அவர்கள் வாழ்த்துரை
வழங்கினார். பேராசிரியர் முனைவர் கி. பார்த்திபராஜா, மாற்று
நாடக இயக்குநர் அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘நாடகம் தரும் கல்வி‘
என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில், ”நாடகப்பயிற்சி கற்றுத் தரும் ஆளுமைத்திறனை, வேறெந்த
கல்வியும் முழுமையாகத் தராது. நாடகம் வாழ்வில் படிநிலை வளர்ச்சியை நல்கும். ” என்றும்
நாடகக்கலையின் மேன்மையையும் எடுத்துரைத்தார். நிகழ்வின் தொடர்ச்சியாகத் தமிழ்த்துறை
மாணவியருக்கு, நாடகப்பயிற்சியை அளித்தார். முதல்நாள் நிகழ்விற்குத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
திருமதி டே. ஆனி மரியஜான்சி நன்றி கூறினார். இந்நிகழ்வை முனைவர் ச.அ. சுஜா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இரண்டாம்நாள் 13.02.2021 அன்று இணையவழியில் நடைபெற்றது. கலையரங்கமும் உரையரங்கமும் நடைபெற்றன. இந்நிகழ்விற்கு
முனைவர் சி. அருள் மைக்கேல்செல்வி வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்
க. லதா அவர்கள் அறிமுக உரையாற்றினார். கல்லூரி
முதல்வர் அருள்சகோதரி முனைவர் ஜெ. செலின்சகாயமேரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இரண்டாம்நாளின் முதல்நிகழ்வாக, கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.
தமிழ்த்துறையின் வளர்ச்சியை எடுத்தியம்பும்
காணொளிக்காட்சி இடம்பெற்றது. மாணவியரின் பரதம், சொற்பொழிவு, ஒயிலாட்டம், சுருள்சுற்றுதல்,
சிலம்பம்சுற்றுதல், கவிதைவாசிப்பு, நாட்டுப்புறப்பாடல், பாரதியார் பாடலுக்கான நடனம்,
நாடகம் முதலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உரையரங்கத்தின் சிறப்பு விருந்தினராக
முனைவர் மு. இராமச்சந்திரன், மேனாள் ஆங்கிலத்துறைத்
தலைவர், (அய்யநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி, சிவகாசி) அவர்கள் கலந்து கொண்டு, “ஒரு சொட்டு
நம்பிக்கை” என்னும் தலைப்பில் சிறப்புரை நல்கினார். அவர்தம் சிறப்புரையில், ”நாம் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம். சங்கப்பாடலில் புலவன் தனது மனைவியிடம் தான் கொண்டு
வந்த பரிசில் பொருளை என்னிடம் கேட்காது, யாருக்குத் தேவையோ அனைவருக்கும் கொடு.” என்று
கூறிய அடிகள் வாழ்வின் நம்பிக்கை ஊற்று. வாழ்க்கையில் புலம்புகிறவன் தோற்றுப் போகிறான்.
நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். நடந்தது
என்றால் நீங்கள் கடவுள் மேல் நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். நம்பிக்கையாளர்
தோற்பதில்லை. துன்பத்தைக் கைவிட்டு நம்பிக்கையுடன் வாழ்வோம்.” என்றுரைத்தார். நம்பிக்கையுடன் உலகை வென்றவர்களைச் சான்றுகாட்டி
மாணவர்களுக்கு ஊக்கமளித்து உரைநிகழ்த்தினார்.
இந்நிகழ்விற்குத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் சு.ர.பூங்கொடி நன்றி
கூறினார். இந்நிகழ்வை முனைவர் இரா. ஏஞ்சல் தொகுத்து வழங்கினார். நிறைவாகத் தமிழ்ப்பண்ணுடன் முத்தமிழ்விழா இனிதே நிறைவுற்றது.